தமிழ்த் திரைப்படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI-பெப்சி) புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது.
தமிழ்ப் படங்களுக்கான படப்பிடிப்புகளை அவசியமின்றி வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் நடத்தக் கூடாது என்றும் அந்த நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.
படப்பிடிப்பு சரியான நேரத்தில் முடிவடையவில்லை அல்லது செலவு அதிகமாகிவிட்டது என்றால், தகுந்த காரணங்களுடன் தயாரிப்பாளர்களுக்கு எழுத்துப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் பெப்சி புதிய நியதியை உருவாக்கி இருக்கிறது.
விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெப்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பெப்சி அமைப்பின் மூலம் பணியாற்றி வருகின்றனர்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆர் கே செல்வமணி தலைமையில் பெப்சி செயல்படுகிறது.
தமிழ்த் திரையுலகின், தொலைக்காட்சித் தொழில்துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 25,000 தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட இந்திய அமைப்பாக பெப்சி திகழ்கிறது.
தொடர்புடைய செய்திகள்
பெப்சி உறுப்பினர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே புதிய நெறிமுறைகளுக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாக மனோரமா இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகம் இந்தியாவின் ஆகப்பெரிய, மிகவும் பன்மயமான உலகம். அது இந்தியா முழுவதையும் சேர்ந்த கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கிவருகிறது.
குறிப்பாக மலையாள, தெலுங்கு நடிகர்களின் ஆதிக்கம் தமிழ்த் திரையுலகில் அதிகம். அதிக பொருள் செலவில் பெரும் பெரும் கலைஞர்களைக் கொண்டு எடுக்கப்படும் படங்களின் படப்பிடிப்பு வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் நடப்பது உண்டு.
பொதுவாக இந்தியத் திரைப்பட உலகம் வெவ்வேறான மொழிகளைச் சேர்ந்த திரைத் துறைகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு இடம்பெறக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
இந்த நிலையில் பெப்சியின் புதிய நெறிமுறைகள் தொடர்பில் இணையத்தில் குறைகூறல்கள் இடம்பெற்றுள்ளன. விவாதமும் நடக்கிறது.
பெப்சியின் புதிய விதிகள் பற்றி தமிழ்த் திரையுலக பெரும்புள்ளிகள் வாயைத் திறக்கவில்லை.
அதே வேளையில், மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் விஜயன், பெப்சியின் புதிய நியதிகளைப் பகிரங்கமாகக் கண்டித்தார்.
தமிழ்ப்படங்களுக்கு கேரளா தடை போட்டால் தமிழ்த் திரைப்பட உலகம் குறைந்தபட்சம் ரூ.150 கோடி வருவாயை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
இந்தியாவை ஒரே நாடாக நாம் பார்க்கையில், தமிழ்த் திரைப்பட சங்கங்கள் வேறு பாதையில் போகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெப்சியின் இந்த முடிவை தமிழக அரசும் எதிர்த்ததாகத் தெரியவில்லை என்பதை அவர் சுட்டினார்.
“இத்தகைய பிரிவினைவாத அணுகுமுறை வளர அனுமதிக்கக் கூடாது. இந்தியக் கலைஞர்கள் யாரும் எந்த மொழியிலும் எந்த மாநிலத்திலும் நடிக்கலாம். இதை யாரும் தடுக்கக் கூடாது,” என்று அவர் கூறினார்.
நாளை நமதே, என் மனவானில், காசி போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கி இருக்கும் விஜயன், தான் தமிழ்த் திரைப்படங்களை மிகவும் நேசிப்பதாகவும் ஆனால் குறுகிய கண்ணோட்டங்களை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, இணையத்தில் பதிவேற்றப்படும் குறைகூறல்களுக்குப் பதிலடியாக பெப்சியின் தலைமைச் செயலாளர் பி என் சுவாமிநாதன், தமிழ்த் திரைத்துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலைஞர்களைக் காக்கவே பெப்சி போராடுகிறது என்றார்.
“தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் கலைஞர்களைத் தடுக்கும் அதிகாரம் பெப்சிக்கு கிடையாது.
“தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் இதர மாநில தலைமை தொழில்நுட்பர்களைக் கட்டுப்படுத்தும் நிபந்தனைகளை பெப்சி விதித்ததும் கிடையாது.
“தமிழ் நடனமணிகளும் சண்டைக் காட்சி கலைஞர்களும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்கள். அதேபோல் அவர்களும் தமிழ்ப்படங்களில் நடிக்கிறார்கள்.
“இந்த முறை நாங்கள் நாட்சம்பளக் கலைஞர்களுக்குத்தான் குரல் கொடுக்கிறோமே தவிர வேறு எதுவும் இல்லை,” என்று பி என் சுவாமிநாதன் கூறியதாக டெக்கான் ஹெரால்டு தெரிவித்தது.