விவசாயத்தை விரும்பிப் பார்க்கும் தொழிலாக்குவோம்: ஸ்டாலின் சவால்

2 mins read
f805d1d0-a3cb-4abe-9445-fbfa31a37e9b
வேளாண் சங்கம் 2023 என்ற மூன்று நாள் வேளாண்மை விழாவில் இடம்பெற்ற காய்கறி கண்காட்சிகளை முதல்வர் பார்வையிட்டார்.  - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: விவசாயத் தொழிலை அனைவரும் விரும்பிப் பார்க்கும் தொழிலாக ஆக்கிக் காட்டுவோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்து இருக்கிறார்.

வேளாண் சங்கம் 2023 என்ற மூன்று நாள் வேளாண்மை விழாவை திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கி வைத்து கண்காட்சிகளைப் பார்வையிட்ட முதல்வர், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கினார்.

விவசாயத்தை அனைவரும் விரும்பிப் பார்க்கும் தொழிலாக மாற்ற வேண்டுமானால் நிலத்தின் மதிப்பு கூட வேண்டும். அந்த நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதிகாரிகளுக்கும் வேளாண்மை தெரிய வேண்டும். இவை எல்லாம் சேர்ந்து இடம்பெற்றால்தான் வேளாண்மை வர்த்தகத் தொழிலாக மாறும் என்றும் இதை தாங்கள் சாதிக்க முயன்று வருவதாகவும் திரு ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாட்டின் பொருளியல் செழிக்க வேண்டுமானால் பொருளியலின் அனைத்து துறைகளும் ஒரு சேர வளர வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு வேளாண் துறையும் இதர சிறப்பு வளர்ச்சித் துறைகளைப் போல பெரும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் இந்த முயற்சிகளின் விளைவுகளை கூடிய விரைவில் கண்கூடாகக் காண முடியும் என்றும் திரு ஸ்டாலின் தெரிவித்தார்.

பொருளியலின் பல்வேறு துறைகளையும் வளர வைத்து பெருக்க நிதி வளம் அவசியமானது.

ஆனால், வேளாண் துறையைப் பொறுத்தவரை நிதி வளத்தோடு நீர் வளமும் தேவை என்பதால் நீர்வளத்தைப் பெருக்க தமிழக அரசு பாடுபடுவதாகவும் அவர் கூறினார்.

தமிழக அரசின் விவசாய சார்புக் கொள்கைகளின் காரணமாக மாநிலத்தில் வேளாண் நிலப்பரப்பு கூடி இருக்கிறது. உற்பத்தியும் பெருகி இருக்கிறது.

வேளாண்மைக்கு என்றே தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்று திரு ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் காரணமாக 2021-2022ஆம் ஆண்டில் 119,970 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டு மிகப் பெரிய சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது என்றார் முதல்வர்.

உரிய தேதிக்கு முன்னரே மேட்டூர் அணை திறக்கப்பட்டு அதன் விளைவாக 36,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 47 ஆண்டு கால வரலாறு காணா சாதனை தமிழகத்தில் இப்போது படைக்கப்பட்டு இருக்கிறது என்றும் பெருமைபட திரு ஸ்டாலின் குறிப்பிட்டார்.

வேளாண்மைக்காகவே ‘தமிழ் மண்வளம்’ என்ற இணையத் தளம் தொடங்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டினார்.

விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும் ‘உழவன் செயலி’, உழவர்களின் விவரங்களை உள்ளடக்கிய வலைத்தளம் ஆகியவை செயல்பாட்டில் இருப்பதையும் அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.

விவசாயிகள் வேளாண்மையைப் பெருக்க வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே 1.5 லட்ச விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது மேலும் 50,000 பேர் இலவச மின் இணைப்பைப் பெறுகிறார்கள் என்று திரு ஸ்டாலின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்