நெய்வேலி: கடலூர் மாவட்டத்தின் நெய்வேலியில் ‘என்.எல்.சி.இந்தியா’ நிர்வாகம் தனது இரண்டாவது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை கடந்த 26ஆம் தொடங்கியது.
அதற்காக அந்த நிறுவனம் விளைநிலங்களைக் கையகப்படுத்தி, சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலங்களின் பயிர்களை ஏராளமான ராட்சத எந்திரங்கள் மூலம் அழித்து, பரவனாறு பகுதிக்கு மாற்றுப்பாதை வெட்டும் பணியை முடுக்கிவிட்டிருந்தது.
அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
என்எல்சி நிறுவனம் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாசை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, அங்கு வன்முறை வெடித்தது.
வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர்.
இந்த சம்பவத்தால் நெய்வேலி என்எல்சி நிறுவனம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், வன்முறையில் ஈடுபட்டதாக 28 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் அனைவரையும் சனிக்கிழமை நீதிபதி முன் முன்னிலைப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து 28 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.