திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்புகளும் பல்லிகளும் திருச்சி விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
சனிக்கிழமை இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்தடைந்த பயணிகள் வழக்கமான சுங்கச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் என்ற பயணியின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது உடைமைகளை தீவிரமாக சோதித்தபோது, ஒரு பெட்டிக்குள் ஏதோ நகர்வது போன்று தெரியவந்தது. எனவே, அவரை தனியாக அழைத்துச் சென்று மீண்டும் சோதனையிட்டனர்.
அப்போது, அவரது பெட்டிக்குள் சில அரிய வகை பாம்புகள், இரண்டு பல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அதிகாரிகள், முகமது மொய்தீனிடம் மேலும் விசாரணை நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.