கடலூர்: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) சுரங்க விரிவாக்கத்துக்காக கால்வாய் தோண்டும் பணி சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அடுத்தகட்ட போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.
சனிக்கிழமை விவசாயி களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக அமைப்பின் சார்பில் நடைபெற இருந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள கத்தாழை, கரி வெட்டி, ஆதனூர், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் என்எல்சி நிறுவனம் கடந்த சில நாள்களாக கால்வாய் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கெனவே உரிய இழப்பீடு கொடுக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட நிலப்பகுதிகளில் மட்டுமே பணிகள் நடைபெறுவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அறுவடைக்குக் காத்திருக்கும் விளை நிலங்களிலும் என்எல்சி கால்வாய் தோண்டுவதாக விவசாயிகள் சாடியுள்ளனர்.
என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாமக சார்பில் அந்நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 28 பேர் கைதாகினர்.
போராட்டம், வன்முறை காரணமாக சுரங்க விரிவாக்கப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்எல்சி தரப்புப் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்கள் கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதனால் ஆவேசமடைந்துள்ள அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடத் தயாராகின்றனர். இந்நிலையில் என்எல்சி பணிகள் நடைபெறும் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே என்எல்சி விவகாரத்தில் விவசாயிகளையும் காவல்துறையையும் மோதவிட்டு தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக விவசாயிகள் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். எனவே அரசைக் கண்டித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் காந்திய வழியில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

