சென்னை: மகளிர் முன்னேற்றத்திற்கு தோழி விடுதி வலு சேர்க்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணிபுரியும் பெண்களுக்கு உதவும் விதமாக மகளிர் தங்கும் விடுதிகளை தொடங்கியுள்ளது தமிழக அரசு.
முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 11 விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க். ஸ்டாலின் தோழி விடுதிகள் முன்னேறும் மகளிர்க்கான முகவரி எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மகளிர்க்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் 33% ஒதுக்கீடு, உயர் கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான தமிழக அரசின் திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது.
“‘திராவிடர் இல்லம்’ போல், நமது திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைகொள்ளும்,” என முதல்வர் ஸ்டாலின் தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
தோழி விடுதி திட்டம் மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இத்திட்டத்தின் மூலம் அனைத்துத் தரப்பு பெண்களும் பலன் அடைவர் என்றார்.
பல்வேறு அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இந்த விடுதிகளில் மாத அடிப்படையிலும் நாள் கணக்கிலும் பெண்கள் தங்கலாம்.

