தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை: கஞ்சா போதையில் வழிப்பறி செய்த சிறார்கள்

1 mins read
99680b28-1708-49fc-9b2e-3521c9a5ac71
கஞ்சாவுக்காக வழிப்பறி நடந்துள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: சிறார்கள் இடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் வெள்ளிக்கிழமை கஞ்சா போதையில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உள்பட ஏழு பேர் கல்லூரி மாணவர்களை வழிப்பறி செய்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒரு தனது நண்பர்களுக்கு மது, கஞ்சாவுடன் பிறந்தநாள் விருந்து கொடுத்துள்ளார்.

இவர்கள் அதேபகுதியில் உள்ள திடலில் போதையில் மயங்கியிருந்த போது ஏழு சிறுவர்கள் அங்கு வந்து கஞ்சா புகைத்துள்ளனர்.

கல்லூரி மாணவர்கள் சிறுவர்களுக்கும் மது அளித்தனர். இந்நிலையில் போதை இறங்கியதும் அந்த சிறுவர்கள் கஞ்சா தருமாறு கேட்க, கல்லூரி மாணவர்கள் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடிக்க, சிறார்கள் திடீரென தங்களிடம் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, கல்லூரி மாணவர்களிடம் இருந்த தங்கச் சங்கிலி, கைக்கடிகாரம், ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் ஏழு சிறுவர்களையும் பிடித்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுவன் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் என்றும் மற்றொருவர் தொழில் பயிற்சி மையத்தில் படித்து வரும் மாணவன் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில் காவல்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்