ஈரோடு மாவட்டத்தில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு

1 mins read
83450a72-e005-459e-a63d-af03c120bb0b
கள்ள நோட்டு. - படம்: ஊடகம்

ஈரோடு: தமிழகத்தில் ஒரு கும்பல் திட்டமிட்டுக் கள்ள ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், பேரங்காடிகளைக் குறி வைத்து கள்ள ரூபாய் தாள்களைப் புழக்கத்தில் விடும் கும்பலுக்கு ஈரோடு காவல்துறை வலைவீசியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

“இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு கடைகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள்.

“யார் மீதேனும் சந்தேகம் எழுந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து அவரைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள், துணிக்கடைகள், பழக்கடைகள், உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கள்ள நோட்டுகள் அதிகமாக மாற்றப்படுகின்றன.

“மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் 500 ரூபாய் 200 ரூபாய் கள்ள நோட்டுகளைத்தான் அதிகம் புழக்கத்தில் விட்டு வருகின்றனர்,” என்று ஈரோடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து அந்தியூர் உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறி வுறுத்தப்பட்டுள்ளன.

அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிலர் கள்ள ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து மாற்றி வருவதாகவும் மக்கள் விழிப்புடன் செயல்படாவிட்டால் ஏமாற நேரும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், மொத்தமாகப் பணத்தை மாற்றினால் ஆதாயமடையலாம் என ஆசை காட்டினால் ஏமாற வேண்டாம் என்று அந்தியூர் காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்