தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.200ஐத் தாண்டியது

2 mins read
c85e09e6-6883-4116-9b56-86c66452851e
தக்காளி விலை கட்டுக்கடங்காததால் அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை ரூ.150க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய சந்தையான கோயம்பேட்டில் வழக்கமாக அறுபது லாரிகளுக்கும் மேல் நாள்தோறும் தக்காளி கொண்டு வரப்படுகிறது.

ஆனால் தற்போது 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியது.

மொத்த சந்தையில் கிலோ ரூ.130க்கும் சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.160க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரம் தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

மாறாக, தக்காளி வரத்து மேலும் குறைய தொடங்கியதால் விலை மேலும் எகிறியது.

கோயம்பேடு சந்தையில் நேற்று காலை 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. சந்தையில் உள்ள சில்லறை கடைகளில் தக்காளி கிலோ ரூ.180க்கும், வெளியிடங்களில் ரூ.200க்கும் விற்பனை ஆகிறது.

சென்னை புறநகர் பகுதிகள், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி விலை ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திராவில் பலத்த மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி வரத்து பாதியாக குறைந்தது.

இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

தக்காளியை மொத்தமாக பதுக்கும் வியாபாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்