தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் இருவரைச் சுட்டுக்கொன்ற காவல்துறை

1 mins read
50e5f286-26cb-4e71-b815-83c8c64d6da9
சோட்டா வினோத், ரமேஷ். - படம்: ஊடகம்

சென்னை: அதிகாலை வேளையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் (என்கவுன்டர்) குண்டர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

நள்ளிரவு முதல் கூடுவாஞ்சேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது வேகமாக வந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்தியபோது, அது நிற்காமல் சென்றதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, காவல்துறையினர் அந்தக் காரை துரத்திச் சென்றனர். அந்தக் காரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குண்டர்கள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவர் உட்பட நான்கு பேர் இருந்துள்ளனர்.

அவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதை அடுத்து, பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.

அதிகாலை வேளையில், புற நகர்ப் பகுதியில் குண்டர்கள் காரில் தப்ப முயன்றதும் காவல்துறையினர் அவர்களைத் துரத்தியதும் அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூடும் பரபரப்பான திரைப்படக் காட்சிகள் போல் அடுத்தடுத்து அரங்கேறின.

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பியோடிய மற்ற இரு குண்டர்களுக்கும் வலைவீசியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடுதல் தகவல்களைக் காவல்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்