சென்னை: கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,705 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2008ஆம் ஆண்டு தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“பின்னர் 2015ஆம் ஆண்டு தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் , தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமாக மாற்றப்பட்டது.
“கடந்த 15 ஆண்டுகளில் மொத்த உறுப்பு தானம் செய்தவர்கள் எண்ணிக்கை 1,705 ஆகும். இதயம், நுரையீரல் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 6,247 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர 2,500 கண்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் மட்டும்தான் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 22 லட்சம் ருபாய் வரையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
உடல் உறுப்பு தானம் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

