சென்னை: இந்தியாவில் ஆளில்லா வானூர்திகளுக்கான முதலாவது பரிசோதனை நிலையம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லம்-வடகல் இடைப்பட்ட பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்காப்பு பரிசோதனை உள்கட்டமைப்பு வசதித் திட்டம் என்ற ஒரு திட்டத்தின்கீழ் அந்த நிலையம் அமைக்கப்படும்.
தற்காப்பு அமைச்சு ரூ.50 கோடி செலவில் அந்த நிலையத்தை அமைக்க பச்சைக்கொடி காட்டி இருக்கிறது.
தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சிக் குழுமத்துடன் சேர்ந்து கெல்ட்ரான் தலைமையிலான ஒரு கூட்டு நிறுவனம் அதற்கான ஒப்பந்தப்புள்ளியைத் தாக்கல் செய்தது. அதற்கு தற்காப்பு அமைச்சு அனுமதி அளித்து இருக்கிறது.
அதிநவீன தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வது என்று இந்தியா உறுதிபூண்டு இருக்கிறது. அதற்குச் சாட்சியமாக இந்தப் புதிய நிலையம் திகழும்.
இது முன்னேற்றத்தின் அறிகுறியாக இருக்கும். முதலீடுகளைக் கவர்ந்து ஈர்க்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஆளில்லா வானூர்திகளுக்கான தொழில்நுட்ப ஆய்வு, உருவாக்க மையமாக இந்தியா அங்கீகரிக்கப்பட இது வழிவகுக்கும் என்று அதிகாரபூர்வ தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளில்லா வானூர்தி தொழில்துறை இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு வருகிறது.
இத்தகைய ஒரு நேரத்தில் புதிய பரிசோதனை நிலையம் அமைக்கப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு துறைகளில் ஆளில்லா வானூர்திகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தத் துறை ஆண்டுக்கு 22% வளர்கிறது. வரும் 2025வது ஆண்டு வாக்கில் இந்தத் துறை ரூ.28,000 கோடி மதிப்பிலானதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

