அணைக்கட்டு: காதலன்தான் முக்கியம் என்று பெற்றோரைக் கைவிட்ட பெண்ணும் இப்படிப்பட்ட பெண் தங்களுக்கு வேண்டாம் என்று அந்தப் பெண்ணையே கைவிட்ட பெற்றோரும் ஒரு காவல் நிலையத்தில் இருந்து வெவ்வேறு பாதையில் பிரிந்துபோனது மனதை நெருட வைத்த ஒரு சம்பவமாக இருந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாகஜோதி என்ற 22 வயது பெண், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த சுரேஷ், 22 என்ற வாலிபரைக் காதலித்தார்.
அந்த வாலிபரும் நாகஜோதி மீது உயிரையே வைத்திருந்தார். தங்கள் காதலுக்கு நிச்சயம் பெற்றோரின் அனுமதி கிடைக்காது என்று தெரிந்துகொண்ட அந்த இருவரும் சென்ற மாதம் 26ஆம் தேதி வீட்டைவிட்டு ஓடிவிட்டனர்.
நாகஜோதியும் சுரேஷும் நேரே வேலூரில் உள்ள செல்லியம்மன் என்ற கோயிலுக்குச் சென்று அங்கு திருமணம் செய்து கொண்டதாகத் தெரியவந்தது.
இதனிடையே, தன்னுடைய மகளைக் காணவில்லை என்று நாகஜோதியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
உடனடியாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். ஒடுகத்தூர் பகுதிக்குச் சென்று நாகஜோதியையும் சுரேஷையும் தேடினர்.
இதைத் தெரிந்துகொண்ட அந்தக் காதல் ஜோடி, தப்பி ஓடி வேப்பங்குப்பம் என்ற ஊரில் உள்ள காவல்நிலைத்திற்குள் புகுந்துவிட்டது.
அங்கு சென்ற அதிகாரிகளும் நாகஜோதியின் உறவினர்களும் பெற்றோரும் தங்கள் பெண் தங்களிடமே திரும்பி வர அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் சுரேஷைவிட்டு ஒரு வினாடிகூட பிரிந்து உயிர்வாழமாட்டேன். எனக்கு இனிமேல் பெற்றோரோ, உறவினரோ முக்கியமல்ல. சுரேஷ்தான் எனக்கு உயிர். ஆகையால் அவரை பிரியவேமாட்டேன் என்று கதறி கதறி நாகஜோதி அழுதார்.
எவ்வளவோ சொல்லியும் தங்கள் மகள் கேட்காததால் எப்படியாவது தொலையட்டும் என்று நாகஜோதியைக் கைவிட்டுவிட்டு பெற்றோரும் உறவினர்களும் வந்த வழியே சென்றுவிட்டனர்.
அனைத்து தரப்பினரும் கையெழுத்திட்ட கடிதத்தை வாங்கிக்கொண்டு அதிகாரிகள் அவர்களை அனுப்பி வைத்தனர்.
காதல் ஜோடி ஒரு பக்கமும் பெற்றோர், உறவினர்கள் மறுபக்கமும் கலைந்து சென்றனர்.
