சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நடப்பாண்டில் ஜூன் மாதத்தைக் காட்டிலும் ஜூலை மாதத்தில் கூடுதலாக 8 லட்சத்து 46 ஆயிரத்து 816 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் 82 லட்சத்து 53 ஆயிரத்து 692 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக, ஜூலை 28ஆம் தேதி ஒரேநாளில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 495 பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
‘கியூஆர்’ குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு 20 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் ‘கியூஆர்’ குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 29 லட்சத்து 10 ஆயிரத்து 875 பேரும் பயண அட்டைகளைப் பயன்படுத்தி 48 லட்சத்து 85 ஆயிரத்து 843 பேரும் பயணம் செய்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதேநேரம் சிங்காரச் சென்னை அட்டையைப் (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 244 பேர் மெட்ரோ ரயில்களில் சென்றுள்ளனர்.