சென்னை: “திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 292 கொடையாளர்கள் இதுவரை உறுப்பு தானங்களை செய்துள்ளனர். அவர்கள் அளித்த உறுப்புகளின் பயன்பாடு என்பது, 1,162 ஆக இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்றைக்கு உறுப்பு தானம் என்பது ஓர் இயக்கமாக இருந்து வருகிறது,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நோட்டோ எனும் தேசிய உடலுறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை அமைப்பின் மூலம் 13வது இந்திய உறுப்பு தான தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியா முழுமைக்கும் உறுப்பு தான சிகிச்சைகள், மாற்று சிகிச்சைகள் அதேபோல் அதற்கான விழிப்புணர்வு போன்ற பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிற மாநிலங்கள் மற்றும் தனி மனிதர்கள், அமைப்புகள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அதன்படி இந்திய அளவில் உறுப்பு தான திட்டத்தில் சிறப்பான செயல்பாட்டுக்காக சிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்ந்தெடுத்து சோட்டோ எனும் மாநில உடலுறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை அமைப்பின் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இதன் மூலம் தமிழகம், ஏற்கெனவே கடந்த காலங்களில் பெற்றிருந்த இந்த சிறப்புக்குரிய தகுதியை தொடர்ந்து நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 2008ஆ ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் ஜித்தேந்திரன் என்ற மாணவன் சாலை விபத்தில் மரணம் அடைந்த நேரத்தில் அவருடைய உறுப்புகளை பெற்றோர் மனம் உவந்து உறுப்பு தானம் செய்தார்கள். அது அன்றைக்கு பெரிய அளவிலான செய்தியாக வந்தது. தொடர்ச்சியாக அன்றைய முதல்வர் கருணாநிதி, அந்தப் பெற்றோரை அழைத்து, அவர்களைக் கௌரவித்து, அவர்களுடைய அந்த சிறந்த குணத்துக்காகப் பாராட்டினார்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் இன்றைய முதல்வர், நேரடியாகவே திருப்போருர் பகுதிக்கு சென்று ஜித்தேந்திரனின் பெற்றோருக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். அப்பொழுதுதான் கருணாநிதியால், 2008 செப்டம்பர் மாதம் மூளைச்சாவு அடைந்தவர்களிடத்திலிருந்து உறுப்புகளை பெற்று அதன் மூலம் மற்றவர்களுக்கு பொருத்துகிற அந்த மகத்தான திட்டத்தை அறிவித்து, தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் எனம் ஒரு திட்டத்தை தொடங்கினார். அந்தத் திட்டம் இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியான திட்டமாக இருந்தது. தொடர்ச்சியாக அந்த திட்டமானது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமாக உருவாக்கப்பட்டது.” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

