திட்டமிடாத பணியால் திணறும் தென்காசி மக்கள்

1 mins read
f890d104-dccf-4db4-9fbf-59dd8ae4c4f9
குறுகலான மண் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. - படம்: தமிழக ஊடகம்

தென்காசி: திருநெல்வேலி- தென்காசி இடையே ரூ.430.71 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணி கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. பழைய பேட்டையில் இருந்து ஆலங்குளம் வரை 22.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தொகுப்பாகவும், ஆலங்குளம் முதல் தென்காசி ஆசாத் நகர் வரை 22.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தொகுப்பாகவும் பணி நடைபெற்று வருகிறது.

பழைய பேட்டை - ஆலங்குளம் இடையே 2022 செப்டம்பர் 2ஆம் தேதிக்குள்ளும், ஆலங்குளம் - ஆசாத் நகர் இடையே 2022 ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள்ளும் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் 18 மாதங்களில் நான்குவழிச் சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், பணிகள் தொடங்கி 30 மாதங்கள் ஆகியும் இன்னமும் முடிவடையவில்லை.

குறுகலான மண் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் புழுதி பறக்கிறது. இதை அடிக்கடி சீரமைத்து, தண்ணீர் தெளிக்கும் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பணி நடைபெறும்போதும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

சாலை ஓரங்களில் உள்ள வீடுகள், கடைகள் புழுதி படலமாகக் காட்சியளிக்கின்றன. பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்கவும், சிரமம் ஏற்படாத வகையில் போக்குவரத்துக்கு பாதை வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்