யாழ், நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் என அறிவிப்பு

யாழ், நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் என அறிவிப்பு

1 mins read
2e57782e-c2bd-45b2-8b60-6011b64c6df5
காங்கேசன்துறை துறைமுகம். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ராமேசுவரம்: தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதிக்கும் இடையே மிக விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்க உள்ளதாக வவுனியாவில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கேசன்துறைக்கும் காரைக்கால் பகுதிக்கும் இடையேதான் கப்பல் சேவை தொடங்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது என்றும் தற்போது காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினம் இடையே பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதற்காக நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், பணிகள் நிறைவடைந்தவுடன் பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார்.

இதற்கிடையே நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. மொத்தம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

காங்கேசன் துறை, நாகப்பட்டினம் இடையே சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க பயணிகள் கப்பலுக்கு நான்கு மணி நேரமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலிருந்து இலங்கையில் உள்ள வடமாகாணப் பகுதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது,

முன்னதாக இந்தியத் தரப்பில் காரைக்கால் துறைமுகத்தைக் கைவிட்டு, பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக நாகப்பட்டினம் துறைமுகம் தேர்வு செய்யப்பட்டதால், கப்பல் போக்குவரத்தை் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்