ஆகஸ்ட் 15 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட விவசாய சங்கங்கள் அறிவிப்பு

1 mins read
0354dea9-97ca-4a69-82ae-c944837cb0b4
படம்: - தமிழ் முரசு

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகளின் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

திமுக தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டிய பி.ஆர்.பாண்டியன், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு கூறியபடி விலையை உயர்த்தி கொடுக்க அரசு தவறிவிட்டது என்றார்.

“தமிழகத்தில் நடப்பாண்டில் உணவுப் பொருள்களின் உற்பத்தி பாதிக்கும். தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் ஒருமுறைகூட கருத்து கேட்புக் கூட்டம் நடத்தவில்லை. இதேபோல் மத்திய அரசும் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது.

“காவிரி ஆணையத்தை அவசரமாகக் கூட்டி மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கவேண்டும். ஆணையத்தைக் கூட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி கடிதம் எழுதவேண்டும்.

“நில உரிமைச் சட்டம் 2023ஐ அரசு திரும்பப்பெற வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 15 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்,” என்றார் பி.ஆர்.பாண்டியன்.

குறிப்புச் சொற்கள்
விவசாயம்போராட்டம்