‘‘தமிழ்நாட்டின் முதல்வராக எம்ஜிஆர் பதவி வகித்தபோது சுமார் 41 ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.
கைத்தொழில் தெரிந்த பாமர மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இடம்பெற்ற அந்தத் திட்டத்தின்படி இந்த இடமும் இதில் உள்ள கூண்டு போன்ற சிறு கடையும் என் தந்தைக்குக் கிடைத்தது,’’ என்று கும்பகோணத்தைச் சேர்ந்த தெக்சிணாமூர்த்தி, 56, என்ற சாமானியர் கூறினார்.
“அப்போது எனக்கு வயது 15 இருக்கும். படிக்கவில்லை. அதனால் தந்தையிடமே வேலைக்குச் சேர்ந்து அவருக்குப் பிறகு இந்தக் கடைக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு அது முதல் இதே இடத்தில் தொழில் நடத்தி வருகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
கும்பகோணத்தில் பரபரப்பான காமராஜர் சாலையில் பள்ளிக்கூடங்களும் பேருந்து நிலையமும் அமைந்திருக்கும் ஒரு பகுதியில் ஒரு திருப்பத்தில் இவரின் பெட்டிக் கடை அமைந்திருக்கிறது.
எப்போது பார்த்தாலும் ஒரே இரைச்சலும் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கின்ற இடத்தில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை தொழில் நடத்தும் திரு தெக்சிணாமூர்த்திக்கு இரண்டு பிள்ளைகள்.
மனைவி திருமதி சந்திரா, 50, குடும்ப மாது. மகன் சிவா, 20, கல்லூரியில் படிக்கிறார். புவனேஸ்வரி, 18, என்ற மகளும் படித்துவருகிறார்.
“நான் சிறுவனாக இருந்தபோது கடைகளுக்குப் புதிதாக காலணி தைத்துக் கொடுக்க கூலி ஒரு சோடிக்கு 30 காசு. இப்போது கூலி 60 ருபாய். அறுந்துவிட்ட காலணியைத் தைத்துக் கொடுக்க அப்போது கால் அணா, அரை அணா.
“இப்போது ரூ.20 முதல் கூலி வாங்குகிறேன். மாதம் பிறந்து முதல் வாரத்தில் தொழில் ஓரளவுக்கு நன்றாக நடக்கும். பிறகு நாள் ஆக நாள் ஆக குறையும். நாள் ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை சம்பாதிக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
‘‘இதுவரை எதற்கும் ஒருவரிடம் போய் கைகட்டி நின்றதில்லை. கைத்தொழில்தான் என்னையும் என் குடும்பத்தையும் காத்து கண்ணியமாக வாழ வைக்கிறது. என் மகனும் மகளும் படிக்கிறார்கள். ரூ.1,400 மாத வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து அதில்தான் வசித்து வருகிறோம்.
‘‘என் தந்தையிடம் இருந்து நான் இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டேன். ஆனால், என் மகனுக்கு இதில் நாட்டம் இல்லை.
‘‘இப்போதெல்லாம் ரப்பர், பிளாஸ்டிக் யுகமாகிவிட்டது. வசதியாக இருக்கிறது என்று பிளாஸ்டிக் காலணிகளைப் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. என் போன்றோருக்குத் தொழில் படுத்துவிட்டது.
‘‘மாட்டுத் தோல், ஆட்டுத்தோல் காலணிதான் உடலுக்கு நல்லது. காலணியில் பொதுவாக பாதம் படும் பகுதி மாட்டுத்தோலால் ஆனதாக இருக்க வேண்டும். காலணியின் மேல் பட்டை பகுதிகளை ஆட்டுத்தோலால் செய்யலாம்.
‘‘காலணியின் அடிப்பகுதி அதாவது தரையில் படும் பகுதி டயரால் ஆனதாக இருந்தால் காலணி ஐந்து ஆண்டுகள்கூட உழைக்கும். ரப்பர் பிளாஸ்டிக் வைத்து ஒட்டினால் காலணி சீக்கிரம் சிதைந்துவிடும்.
‘‘இப்போது தோல் செருப்பைத் தைத்துத் தயாரிக்க ரூ.300 ஆகும். அடிப்பகுதி ரப்பர் அல்லது பிளாஸ்டிக் ஒட்டி இருக்கும். ஒரு நாளில் மூன்று சோடி தைத்து தயாரிக்கலாம். ஒட்டுப் பசையால் ஒட்டி, பிறகு ஒயர் நூலால் தைப்போம்.
‘‘நூலில் மெழுகு தடவி அதன் முறுக்கு பிரியாமல் கெட்டியாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு நூல் கண்டு அப்போது ஓரணா, அரையணா விற்றது. இப்போது கண்டு விலை ரூ.60க்கு விற்கப்படுகிறது.
‘‘தோலால் ஆன காலணி தண்ணீரில் புழங்க ஒத்து வராது. இப்போது பிளாஸ்டிக், ரப்பர் காலணிகள் வசதியாக இருக்கின்றன. மக்கள் பிளாஸ்டிக் காலணிகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.
‘‘உடல்நலத்தை நினைத்துப் பார்ப்பதில்லை. பிளாஸ்டிக் காலணியைப் பயன்படுத்தினால் காலப்போக்கில் நிச்சயம் தலைவலி வரும். பித்தவெடிப்பு உண்டாகும். உடலில் வெப்பம் அதிகரித்து வயிற்றுவலி போன்றவையும் ஏற்படலாம்.
‘‘இந்தப் பாதிப்புகள் காலப்போக்கில்தான் ஏற்படும் என்பதால் அது பற்றி கவலைப்படாமல் மக்கள் பிளாஸ்டிக் காலணிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது உடல்நலத்திற்குக் கேடானது என்பதில் சந்தேகமே இல்லை,’’ என்று திரு தெக்சிணாமூர்த்தி விளக்கினார்.
‘‘அப்போதெல்லாம் காலணியில் ஆணிகளை நிறையப் பயன்படுத்துவோம். இப்போது சுத்தமாக ஆணிகளைப் பயன்படுத்துவதே இல்லை.
‘‘குதிகால் உயரமாக காலணி அணிவதும் பாதிப்புதான்,’’ என்று திரு தெக்சிணாமூர்த்தி கூறினார்.
‘‘இயற்கையிலேயே சிலருக்குக் கால்கள் ஏற்ற, இறக்கமாக இருக்கும். அவர்களுக்குக் காலணி தைக்கும்போது ஒரு காலணியில் அடிப்பக்கத்தைச் சற்று உயரமாக வைக்க வேண்டி இருக்கும். வீட்டினுள்ளே பயன்படுத்தக்கூடிய வழுக்காத காலணிகளையும் தைத்து கொடுக்கிறேன்.
‘‘காலணிகளோடு பள்ளிக்கூட பிள்ளைகளின் புத்தகப் பைகளையும் பேருந்து நடத்துநர் வைத்திருக்கும் பணப்பையையும் தைத்து கொடுப்பேன்.
‘‘கடனுக்குக் காலணியைத் தைத்து வாங்கிக்கொண்டு சம்பளம் வந்ததும் மாதத்தில் முதல் வாரத்தில் பணம் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
‘‘மழை, வெயில் என்று பாராமல் எந்நாளும் கடையைத் திறந்தாக வேண்டிய நிலை தான் என்றாலும் எனக்கு நானே முதலாளி என்பதால் எனக்குச் சோர்வோ, அலுப்போ இன்று வரை தெரிந்ததே கிடையாது. கடைசிவரை இதுதான் என் வாழ்க்கை,’’என்று அவர் மேலும் கூறினார்.
‘‘இதுநாள்வரை இந்த இடத்தில் இதே கடையில் கடந்த 41 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான காலணிகளை என் கைகளால் பழுதுபார்த்துக் கொடுத்து இருக்கிறேன். புதிதாகவும் உருவாக்கிக் கொடுத்து இருக்கிறேன். அதேபோல் பள்ளிப் பிள்ளைகளுக்கும் பேருந்து நடத்துநர்களுக்கும் பைகளையும் தைத்து கொடுத்து இருக்கிறேன்.
‘‘அவை எல்லாம் ஆயிரமாயிரம் கால்களைக் காத்து இருக்கும். கல்விக்கும் பணத்தைக் காக்கவும் பயன்பட்டிருக்கும். அவற்றின் சொந்தக்காரர்கள் இதற்காக எனக்கு நன்றி கூறுகிறார்களோ இல்லையோ எனக்கு இதில் முழு மனநிறைவு ஏற்படுகிறது,’’ என்று திரு தெக்சிணாமூர்த்தி கூறினார்.