ரூ.120 கோடி ஒதுக்கீடு: தமிழகத்தில் நவீனமயமாகும் 15 ரயில் நிலையங்கள்

2 mins read
116233d1-3843-4a60-8685-ab6ba1aa602f
திருச்சி ரயில் நிலையம். - படம்: ஊடகம்

திருச்சி: தமிழகத்தில் 15 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் திருச்சிக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 500 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அவற்றுள் திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட நான்கு ரயில் நிலையங்களும் அடங்கும் என திரு. அன்பழகன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

“முதற்கட்டமாக தென்னிந்தியாவில் உள்ள 25 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. அவற்றுள் தமிழகத்தில் உள்ள 18 ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

“நவீனமயமாக்கும் பணிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 1,309 ரயில்களும் நவீன மயமாக்கப்பட உள்ளன,” என்றார் அன்பழகன்.

திருச்சி கோட்டத்தை பொறுத்தவரை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பாதிப்புலியூர், சிதம்பரம், அரியலூர், திருவண்ணாமலை, விருத்தாச்சலம், வேலூர், கண்டோன்மென்ட், போளூர், லால்குடி ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ், திருச்சி கோட்ட அளவில் நான்கு ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும். இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

“முதற்கட்டமாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், புதுவை ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கும். இந்த ரயில் நிலையங்கள் வெளிநாடுகளில் இருப்பதுபோல் மேம்படுத்தப்படும்.

“திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 15 ரயில் நிலையங்களுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குள் திட்டப் பணிகளை முடிக்க இலக்கு நிர்யணிக்கப்பட்டுள்ளது,” என்று திரு.அன்பழகன் மேலும் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையங்களின் கட்டடங்களை மேம்படுத்தி மறு வடிவமைப்பு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகளுக்கான வழிகாட்டும் பலகைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்