சென்னை: எதிர்ப்பின்றி இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளதற்கு இந்தியா முழுதும் பல்வேறு தரப்பினர் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டத்துக்கு சனிக்கிழமை தலைமை தாங்கி உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ``இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்புகள் எதுவுமின்றி இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்,” என்று பேசியுள்ளார்.
தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலர், அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்துள்ளார்.
“அமித்ஷாவின் இந்தப் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும். இதைக்கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலமன்று,” என்று மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
மேலும் அவர், “தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பாரதிய ஜனதா கட்சியின் பசப்பு அரசியல்,” என்பதை அனைவரும் அறிவோம் என்று ஸ்டாலின் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“பாஜக அரசாங்கத்தின் இந்தித் திணிப்பை மேற்கு வங்காளம், கர்நாடகம் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதை அமித்ஷா உணர வேண்டும். 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பால் மொழிப்புரட்சிக் காலம் உருவானது. அதை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்,’ என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான திரு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ``இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று அமித்ஷா பேசியிருக்கிறார். இந்தியை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது. இந்தித் திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது,“ என்று டுவிட்டரில் தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

