தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்புமணி: என்எல்சிக்கு நிலங்கள் எடுத்தால் புரட்சி வெடிக்கும்

2 mins read
af520512-78dd-48f5-a98d-731d39123cf8
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தை நாசமாக்கும் என்.எல்.சியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுகுறித்து அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், என்எல்சிக்கு மீண்டும் நிலங்களை எடுத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று கூறியுள்ளார்.

“கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் விளைநிலங்களைக் பறிப்பதற்கு எதிராக உழவர்களும், மக்களும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவரும் நிலையில், என்.எல்.சி 1, 1ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்துக்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அது கண்டிக்கத்தக்கது,”

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை என்.எல்.சி நிறுவனம் ஏற்கனவே பறித்துக் கொண்டிருக்கும் சூழலில், இப்போது மீதமுள்ள நிலங்களையும் பறிக்க என்.எல்.சி துடிப்பதும், அதற்கு தமிழக அரசு துணைபோவதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதைப் போல அமைந்திருக்கிறது. தமிழக அரசிடம் இருந்து இப்படி ஒரு துரோகச் செயலை தமிழக மக்கள் எதிர்பார்க்கவில்லை; மன்னிக்கவும் மாட்டார்கள்.

1956ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 25,000 குடும்பங்களுக்குச் சொந்தமான 37,256 ஏக்கர் நிலங்களை என்எல்சி நிறுவனங்களுக்குப் பறித்துக்கொடுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுடன் சுயமரியாதையுடன் வாழ்ந்துவந்த விவசாயிகள், நிலங்கள் பறிக்கப்பட்ட பிறகு நாடோடிகளாகவும் உள்நாட்டு அகதிகளாகவும் மாற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கூலி வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்வதற்கு மாற்று இடங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.

மாறாக, என்.எல்.சி நிறுவனம் கோடி, கோடியாக லாபம் ஈட்டி வெளிமாநிலங்களில் முதலீடு செய்து வருகிறது. என்.எல்.சிக்காக இப்போது பறிக்கப்படவிருக்கும் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களான விவசாயிகளுக்கும் இதேபோன்ற நிலைதான் ஏற்படப்போகிறது. எனவே, தமிழக அரசு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவதற்குத் துணை போகக்கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்