மசினகுடி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சனிக்கிழமை வருகை தந்தார்.
அங்கு ஆஸ்கர் விருதுபெற்ற ஆவணப் படத்தில் நடித்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூர் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.
பின்னர், கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்ற குடியரசுத் தலைவர், அங்கு பொம்மன்- பெள்ளி தம்பதியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், அங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு வழங்கினார். தொடர்ந்து, அங்குள்ள பழங்குடியின மக்கள், பாகன்களுடன் உரையாடினார்.
சென்னைக்கு வருகை தந்த அதிபர் முர்முவை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், ஒரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை குடியரசுத் தலைவருக்குப் பரிசளித்தார்.
ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார் குடியரசுத் தலைவர் முர்மு.
மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் உரையாற்றிய அவர், “சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. பதக்கங்கள் மற்றும் பட்டங்களை பெற்றவர்களுக்கும், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் மற்றும் ஏபிஜே அப்துல்கலாம் ஆகியோர் இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர்கள்தான். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியும் இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்தான். இத்தகைய தலைவர்களை எல்லாம் உருவாக்கிய இந்த பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றுள்ள நீங்கள் அதற்காக பெருமிதம் கொள்ளவேண்டும்,” என்று பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழின் சங்க இலக்கியங்கள் இந்தியாவின் மிகப்பெரிய பொக்கிஷம் என்று குறிப்பிட்ட அவர், திருக்குறள் அறிவுக்களஞ்சியமாக இருந்து வருகிறது என்றார். “தமிழகத்தில் உள்ள கோயில்களும் சிற்பங்களும் தமிழகத்தின் கலைச் சிறப்பினை விவரிக்கின்றன. கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது,” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு பாரதியார் மண்டபம் எனப் பெயர் சூட்டும் விழாவிலும் அவர் பங்கேற்றார்.
திங்கட்கிழமை 7ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், 8ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில், நகர கண்காட்சியான மணிமந்திரைப் பார்வையிட்டபின் சென்னை வழியாக டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

