மு.க.ஸ்டாலின்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக இப்போதே தயாராகிவிட்டது

மு.க.ஸ்டாலின்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக இப்போதே தயாராகிவிட்டது

1 mins read
90e7aafa-0b88-4277-abc9-4fd63cc5d457
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக இப்போதே தயாராகிவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள நாற்பது தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் வகையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி உள்ளதாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

“தேர்தல், பிரசாரத்தின் ஒருபகுதியாக, வாக்குச்சாவடிதோறும் களப்பணியாற்றும் வகையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

“வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை தேர்தலுக்குத் தயார்படுத்தும் விதமாக ஒவ்வொரு மண்டலமாக பயிற்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

பாஜகவைப் பொறுத்தவரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், அவர்களுக்கு வாழ்வா சாவா என்பதை முடிவு செய்யக்கூடியது என்றும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவினர் எதையும் செய்வார்கள் என்றும் அவர் சாடினார்.

தமிழகத்தில் பாஜகவினர் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வி அடைந்து வருவதாகக் குறிப்பிட்ட முதல்வர், இதன் காரணமாக பாஜகவின் கோபம் அதிகமாகி உள்ளது என்றார்.

கடந்த காலங்களில், இதுபோன்ற பல்வேறு தடைகளை சமாளித்துத்தான் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. எனவே இந்த முறையும் நாம் முழுமையான வெற்றியைப் பெறவேண்டும். அதற்காக ஒன்றிணைந்து உழைப்போம்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்