தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேனியில் கஞ்சாவுக்குப் பதில் சிக்கிய நாட்டு வெடிகுண்டுகள்: காவல்துறை அதிர்ச்சி

1 mins read
f686f61f-839b-45d0-9f45-59e86538afb6
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள். - கோப்புப் படம்: ஊடகம்

தேனி: கம்பம் பகுதி காவல்துறையினர் கஞ்சா பதுக்கல் தொடர்பான விசாரணைக்கு சென்ற இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளும் வெடி பொருள்களும் சிக்கின. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டி என்ற கிராமத்தில் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கஞ்சா வியாபாரிகளைக் கைது செய்ய காவல்துறையினர் சென்றனர்.

இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்துள்ள இடங்களை சோதனையிட்டபோது காவல் அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

சோதனை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் சில நாட்டு வெடிகுண்டுகளும் அவற்றைத் தயாரிப்பதற்குத் தேவையான ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர்களும் சிக்கின.

அணைப்பட்டி பகுதியில் கோவில் விழாக்கள் நடைபெற உள்ள நிலையில், அவற்றைக் குலைக்கும் வகையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எவ்வாறு, எதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தனர், வெடி பொருள்களை எங்கு வாங்கினர் என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்