சென்னை: கேளம்பாக்கத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் மூன்று தளங்களில் இயங்கிய துணிக்கடை ஒன்றில் தீப்பிடிக்க, இரண்டு மாடிகளில் உள்ள கடையின் துணிமணிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
இங்கு துணிகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் துணிக்கடையை மூடிச் சென்றனர். இந்த நிலையில் திங்கட்கிழமை காலை சுமார் 6 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி இரண்டு மாடிகளும் பற்றி எரிந்தது. மூன்று தளங்களைக் கொண்டு இயங்கி வந்தது அந்தத் துணிக்கடை ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் கடையில் இருந்து புகை கிளம்பியதைப் பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள், கேளம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்தத் துணிக்கடையை சென்னை தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜாகிர் உசேன், அப்துல்லா ஆகியோர் நடத்தி வந்தனர். கடையின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர் வரும்போது சாவியை எடுத்து வராததால் கடையைத் திறப்பதில் சுணக்கம் ஏற்பட்டது, இதனால் தீ முதல் தளம் முழுவதும் பரவியதால் அங்கிருந்த ஏராளமான துணிமணிகள் எரிந்து சாம்பலாயின.
இந்த தீவிபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.