தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோபுரத்தில் ஏறிக்கொண்ட குடிகாரர்; 3 வயது சிறுமியையும் மீட்பதற்குள் பொழுதுவிடிந்துவிட்டது

2 mins read
085f9533-ad6a-4f79-b3db-431376ff9816
சேட்டு என்ற ஆடவர் குடிபோதையில் தன்னுடைய 3 வயது சிறுமியைக் கைலியில் கட்டிக்கொண்டு 100 அடி உயர கைப்பேசி கோபுரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டார். - படம்: தமிழக ஊடகம் 

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் அருகே உள்ள செட்டிப்பாளையத்தில் வசித்து வரும் சேட்டு என்கிற செல்வா, 35, என்ற ஆடவர் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு தன்னுடைய கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு கைப்பேசி கோபுரம் ஒன்றின் உச்சியில் ஏறிக்கொண்டார்.

அவரையும் அவருடைய குழந்தையையும் பாதுகாப்பாக கீழே கொண்டு வருவதற்குள் காவல்துறையினரும் தீயணைப்பாளர்களும் படாதபாடுபட்டுவிட்டார்கள்.

சேட்டு ஞாயிற்றுக்கிழமையன்று மாலை சுமார் 5.45 மணிக்குக் குடிபோதையில் தன்னுடைய மனைவியுடன் சண்டை போட்டார். தனது மூன்று வயது மகளைத் தூக்கிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடினார்.

குழந்தையைத் தன்னுடைய கைலியின் உள்ளே போட்டுகட்டிக்கொண்டு வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த 300 அடி உயரம் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கைப்பேசி கோபுரத்தின் உச்சியில் 100 அடி உயரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு, அவ்வழியே போவோர் வருவோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உரக்கச் சத்தம் போட்டார்.

அதைக் கண்டு பதறிப்போன அவரின் மனைவியும் கிராமத்து மக்களும் காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் 30 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆடவரைக் குழந்தையுடன் பத்திரமாகக் கீழே இறக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

மனைவியும் அந்த ஆடவரின் ஐந்து வயது மகனும் கீழே இருந்தபடி கீழே வந்துவிடுங்கள் என்று அந்த ஆடவரைக் கெஞ்சி கேட்டுக்கொண்டே இருந்தனர்.

‘‘கோயம்புத்தூர், சேலம் மாவட்ட ஆட்சியர்கள் இங்கே வரவேண்டும். என்னுடைய குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும். இல்லை என்றால் கீழே குதித்துவிடுவேன்,’’ என்று தொடர்ந்து சேட்டு மிரட்டிக்கொண்டே இருந்தார்.

அவருடைய கைலியில் தொங்கிக் கொண்டிருந்த சிறுமி இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்தது.

அதிகாரிகள், கிராம மக்கள் எவ்வளவே முயற்சிகளை மேற்கொண்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இந்த நிலையில் மின்சார வாரியத்திற்குத் தகவல் பறந்தது. அவர்கள் ஒட்டுமொத்தமாக மின்சாரத்தை நிறுத்திவிட்டார்கள்.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தீயணைப்புத் துறையினர் பரபரவென அந்தக் கோபுரத்தின் மீது ஏறினர். அப்போது கீழே நின்றிருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக ஓவென்று அழத் தொடங்கினர். அதைக் கேட்ட சேட்டும் மனமிறங்கி கோபுரத்தில் இருந்தபடியே அழுதார்.

பிறகு மனம் மாறி தன் மகளைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கத் தொடங்கினார். அப்போது தீயணைப்புத் துறையினர் 70 அடி உயரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.

அந்த உயரத்தில் அந்த ஆடவரையும் பிள்ளையையும் பிடித்து பத்திரமாகக் கீழே கொண்டு வந்து சேர்த்தனர்.

அதற்குள்ளாக பொழுதுவிடிந்து திங்கட்கிழமையும் பிறந்துவிட்டது.

கீழே இறங்கியதும் அந்த மூன்று வயது சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சேட்டு மீது புகார் பதியப்பட்டு உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்