‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

1 mins read
dcc08ec9-2972-45d8-aa51-1c308840d7a2
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக இளைஞர்களை உலகளவில் முதன்மையானவர்களாக மாற்றுவதே தமது லட்சியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இதுவரை 150,000 மாணவர்கள் இத்திட்டம் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இத்திட்டம் தமது கனவுத் திட்டம் என்றும் அவர் கூறினார்.

“நடப்பு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் வளர்ந்து வருகின்றன. அனைத்து தரப்பினரும் வளர்ந்து வருகிறார்கள். மாணவர்கள், இளையர்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இத்திட்டம் காரணமாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதுதான் அரசின் இலக்கு,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது என்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க இந்த திட்டம் வழிவகை செய்துள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

“படிக்கும் போதே மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க கிடைத்த வாய்ப்புதான் இந்த திட்டம். அடுத்த மாதம் நடைபெறும் தமிழ்நாடு திறன் போட்டிகளுக்கு இதுவரை 58,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல, திறமையும் சார்ந்தது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்