திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் இடிந்த கோபுரத்தில் மராமத்துப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கோவில் கோபுரத்தின் சுவர் அண்மையில் இடிந்து விழுந்தது. செவ்வாய்க்கிழமை ஸ்ரீரங்கம் சென்ற அமைச்சர் சேகர் பாபு, சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
கோபுரம் இடிந்து விழுந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் மாற்று நடவடிக்கை எடுத்து மராமத்துப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக அப்போது அவர் கூறினார்.
இடிந்து விழுந்த கோபுரத்தைச் சீர்செய்ய 94 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும் நன்கொடையாளர்கள் பலரும் நிதியளிக்க முன்வந்துள்ளதாகவும் சேகர் பாபு தெரிவித்தார்.
இருப்பினும், மராமத்துப் பணிகளுக்கு நன்கொடையாளர்களின் நிதியைப் பயன்படுத்துவதா அல்லது இந்து சமய அறநிலையத் துறையின் நிதியைப் பயன்படுத்துவதா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
இடிந்து விழுந்த கோபுரம் மட்டுமன்றி ரங்கநாதர் கோவிலில் உள்ள 21 கோபுரங்களும் என்ஐடி தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் சேகர் பாபு குறிப்பிட்டு உள்ளார்.

