தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குன்றத்தூர் இரண்டாம் கட்ட அகழாய்வில் 800 அரிய தொல்பொருள்கள் கண்டெடுப்பு

1 mins read
943de7e1-934b-4c22-a73e-8e0098dc6b1c
அண்மையில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள். - படம்: ஊடகம்

காஞ்சிபுரம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குன்றத்தூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்திலும் பல்வேறு அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. அங்குள்ள நத்தமேடு என்ற இடத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த அகழாய்வு தொடங்கியது.

மூன்று மாதங்கள் நீடித்த அகழ்வாராய்ச்சியின் போது கண்ணாடி மணிகள், வட்ட சில்கள், இரும்பாலான ஆயுதங்கள், சுடுமண்ணால் ஆன பொம்மைகள், இரண்டு தங்க அணிகலன்கள் ஆகியவை கிடைத்தன. கற்காலத்தில் பயன்படுத்திய கருவிகளும் கிடைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்ததை அடுத்து அங்கு கடந்த மே மாதம் இரண்டாம்கட்ட அகழாய்வு தொடங்கியது.

இந்நிலையில், தங்க ஆபரணத்திலான சிறு தகடு. ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள், சுடுமண் கருவி, செப்புப் பொருள்கள், சுடுமண் பொம்மைகள், செப்பு வளையங்கள் உள்ளிட்ட அரிய பொருள்கள் கிடைத்துள்ளன.

இதுவரை 800 பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று ஆய்வுக்குத் தலைமையேற்றுள்ள தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

“வடக்குப்பட்டி பகுதியில் பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு கிடைத்திருப்பது மிகவும் முக்கிய கண்டுபிடிப்பு ஆகும். இதுவரை வட தமிழகத்தில் பட்டரைப்பெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழ் பிராமி எழுத்துகள் காணப்படும் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதன் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டாக இருக்கலாம்,” என காளிமுத்து கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்