குடும்பமாகக் கொள்ளையடித்த கும்பல் கைது

2 mins read
407294b3-69b6-49ce-aeb9-6ae79f8a06d4
ரவி, அவரது மனைவி பழனியம்மாள், வனிதா, நதியா. - படம்: ஊடகம்

கோவை: குடும்பமாகச் சென்று நகைகளைத் திருடியவர்களை கோவை காவல்துறை கைது செய்துள்ளது.

பரமக்குடியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பழனியம்மாள். இருவரும் நகைகளைக் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கையை வாழத் திட்டமிட்டனர். இதையறிந்த உறவினர்களான வனிதா, நதியா ஆகிய இருவரும் அவர்களுடன் இணைந்தனர்.

இதையடுத்து இந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கோவையின் பல்வேறு பகுதிகளில் தங்களது கைவரிசையைக் காட்டி வந்தது.

கோவை மாநகரில் கடந்த சில நாள்களாக நகை பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. அப்போது நகரின் மையப்பகுதியில் மூன்று பெண்கள் வேகமாக ஓடிச்சென்று ஆட்டோவில் ஏறிச்செல்வதை அங்கு கண்காணிப்புப் பணியில் இருந்த காவலர்கள் கவனித்தனர்.

வேகமாகச் சென்றதால் ஆட்டோவை காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்க முடியவில்லை. எனினும் ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மூன்று பெண்களையும் அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டதாக அவர் கூறினார். மருத்துவமனை அருகே உள்ள கண்காணிப்புக் கருவிகளை ஆய்வு செய்தபோது மூன்று பெண்களும் ஓர் ஆடவருடன் பேசுவதும் அவரிடம் இருந்த கைப்பேசியின் மூலம் யாரையோ தொடர்புகொண்டு பேசுவதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஆடவரைக் கண்டுபிடித்து காவல் துறையினர் கண்காணிக்கத் தொடங்கினர். பின்னர் அவர் மூலம் மற்ற மூவரையும் கண்டுபிடித்து மொத்தமாகக் கைது செய்தனர். விசாரணையின்போது ரவியும் அவரது மனைவியும் நகைகளைக் கொள்ளையடிக்க இடங்களைத் தேர்வு செய்ததும் அவற்றைப் பறிக்க வனிதா, நதியா உதவியதும் தெரியவந்தது.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பேருந்து, ரயில் நிலையங்களிலும் கோவில்களிலும் இந்தக் கும்பல் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது.

அவர்களிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொள்ளையடித்த நகைகளை விற்றுக் காசாக்கி, பெங்களூரில் ரூ.5 கோடி செலவில் வீடு கட்டியுள்ளார் ரவி. மேலும் சொகுசுக் கார்களும் வாங்கி உள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரின் பிள்ளைகளும் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இந்தக் கும்பல் ஒவ்வொரு மாதமும் இருபது நாள்களுக்கு நகைப்பறிப்பில் ஈடுபடுவதும் மீதமுள்ள நாள்களில் சுற்றுலா செல்வதும் என சொகுசாக வாழ்ந்து வந்துள்ளது.

நால்வரும் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்