சிவகங்கை: கீழடியில் பழங்கால படிக எடைக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் எட்டு கிராம் எடையுள்ள அந்த எடைக்கல் 1.5 சென்டி மீட்டர் உயரமும் 2 இரண்டு சென்டிமீட்டர் விட்டமும் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“எடைக்கல்லின் மேல்பகுதி, அடிப்பகுதி தட்டையாகவும் கோள வடிவில் பளபளப்பாக ஒளிபுகும் தன்மையுடனும் உள்ளது.
“இந்த எடைக் கல்லுடன் சுடுமண் வட்டச் சில்லுகள், இரும்பு ஆணி, கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்பு பூச்சு பானை ஓடுகள் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன,” என்று தொல்லியல் துறையினர் செய்தியாளர்களிடம் கூறினர்.
கீழடியில் தற்போது ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே அங்கு ஆயிரக்கணக்கான தொல் பொருள்கள் கிடைத்துள்ள நிலையில், புதிய அகழாய்வின்போதும் அரிய பொருள்கள் கிடைத்து வருகின்றன.
தற்போது கீழடி, கொந்தகை ஆகிய இரண்டு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொல் பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் குன்றத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின்போது பல்வேறு அரிய பொருள்கள் கிடைத்தன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உரிய இடங்களில் அகழாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் தமிழினம் குறித்த பல்வேறு அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இதுவரை கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களில் எடைக்கல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் கீழடி அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் மருதுபாண்டியன்.
சிந்து சமவெளி நாகரிகம் செழிப்படைய ஆபரண மணிகள்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆப்கானிஸ்தானில் இத்தகைய மணிகள், முக்கிய வணிக இடத்தைப் பெற்ற நிலையில், ஏன் தமிழகத்தில் பளிங்குகல் அத்தகைய இடத்தைப் பெறவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றார்.
எடைக்கல்லை ஆய்வுக்குட் படுத்தும்போது, அதன் தொன்மை பற்றி தெரிய வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.