கோத்ரேஜ் ரூ.515 கோடி முதலீடு

2 mins read
a262d4ef-ead8-4322-a987-5bff0167507a
கோத்ரேஜ் நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் உற்பத்தி நிறுவனத்தை நிறுவுகிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கோத்ரேஜ் பயனீட்டாளர் பொருள்கள் நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவனம் ரூ.515 கோடி முதலீடு செய்கிறது.

இதனால் 446 பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் கோத்ரேஜ் குழுமத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

125 ஆண்டு பாரம்பரியம் கொண்ட பெருங்குழுமமான கோத்ரேஜ் குழுமம், உலகளவில் பல்வேறு வணிகங்களை மேற்கொண்டுவருகிறது. சுமார் 120 கோடி நுகர்வோரின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் நிகர வருமானம், ரூ.7667 கோடி ஆகும். இந்நிகர வருமானம் சுமார் 85 நாடுகளிலிருந்து ஈட்டப்பட்டுள்ளது. கோத்ரேஜ் பயனீட்டாளர் பொருள்கள் நிறுவனம், கோத்ரேஜ் குழுமத்தின் ஓர் அங்கமாகும்

இந்நிறுவனம், இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் ஒரு உற்பத்தி மையத்தினை நிறுவியுள்ள இந்நிறுவனம், மேம்பட்ட உற்பத்தி மையத்தின் ஒரு சிறப்புமிக்க நிறுவனம் என்பதை இலக்காகக்கொண்டு ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளியல் மாநிலமாக விளங்கிவரும் தமிழ்நாடு, தானியங்கி வாகனங்கள், ஜவுளி, காலணி மற்றும் தோல்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு என பல்வேறு வகையான தொழில்களை நிறுவிட ஊக்கமளிப்பதன் மூலம், முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்