பெண் கைதிகள் இயக்கும் பெட்ரோல் நிலையம்

2 mins read
ea7620ec-e228-4cff-91a4-de80a5de60dd
இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கும் பெட்ரோல் நிலையம் சென்னை அருகே புழலில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது - படம்: இந்திய ஊடகம்

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கும் பெட்ரோல் நிலையம் சென்னை அருகே புழலில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

புழல் - அம்பத்தூர் சாலையில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ.1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அந்த நிலையத்தை தமிழக சட்டம், நீதி, சிறைகள் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பெட்ரோல் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறைத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். புதிதாக திறக்கப்பட்ட பெட்ரோல் நிலையத்தில் சுமார் 30 பெண் கைதிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மாத ஊதியமாக ரூ.6,000 பெறுவார்கள்.

தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் நிலையம், சென்னை புழலில் முதல் முறையாக திறந்தது. இதைத் தொடர்ந்து வேலூர், கோயம்புத்தூர், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஆகிய இடங்களில் சிறைத்துறை சார்பில் பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த பங்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர்.

சிறையில் நல்ல நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், பெட்ரோல் நிலையங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். ஒவ்வொரு பெட்ரோல் நிலையம் மூலம் சுமார் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். பெட்ரோல் நிலையம் மூலம் சிறைத்துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதோடு, கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.

கைதிகள் பெட்ரோல் நிலையங்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதினால் புழல் - அம்பத்தூர் சாலையில் பெண் கைதிகளே நடத்தும் பெட்ரோல் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்