நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைகளிடம் இருந்து தங்கள் செல்லப் பிராணிகளைப் பாதுகாக்க சிலர் நாய்களின் கழுத்து வார்ப்பட்டைகளில் ஆணிகளை வைத்துத் தைத்து இருக்கிறார்கள்.
பறவை ஆர்வலரான என். கண்ணன் என்பவர், அண்மையில் கல்லட்டி ரோடு பகுதியில் இருக்கும் சோதனைச் சாவடிக்கு அருகே மூன்று நாய்கள் ஆணிகளுடன் கூடிய கழுத்துப்பட்டைகளுடன் இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டார்.
அது பற்றி அந்த நாய்களின் உரிமையாளர்களிடம் கேட்டபோது, தாங்கள் இப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர்கள் கூறினர்.
எப்போதுமே சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் நாய்க்குட்டிகளின் கழுத்தைத்தான் கவ்வும்.
“பசியாக இருக்கும்போது, மான் போன்றவை கிடைக்காதபோது சிறுத்தைகள் நாய்களைத்தான் குறிவைக்கும். அதனால், எங்கள் செல்லப் பிராணிகளைக் காப்பாற்றுவதற்காக ஆணிகள் தைக்கப்பட்டு இருக்கும் கழுத்துப்பட்டைகளைப் பயன்படுத்துகிறோம்,” என்று அந்த உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறிய விளக்கத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஆர்வலர், அந்தப் பட்டைகளை அகற்றிவிடும்படி கூறியதை உரிமையாளர்கள் நிராகரித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பதிலாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு விலங்குகள் நுழையாதபடி தடுப்பதற்கான ஏற்பாடுகளை வனத்துறை அதிகாரிகள்தான் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறிவிட்டனர்.
நீலகிரியை ஒட்டிய தலைகுண்டா என்ற பகுதியில் சிறுத்தைகள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆணிகள் பதிக்கப்பட்ட கழுத்துப்பட்டை காரணமாக எத்தனை சிறுத்தைகள் காயம் அடைந்தன என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்று வனவிலங்கு இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்த சாதிக் அலி என்பவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதன்தொடர்பில், வனத்துறை அதிகாரிகள் ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.