செஞ்சி மஸ்தான்: பல்வேறு வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 83 தமிழர்கள் மீட்பு

செஞ்சி மஸ்தான்: பல்வேறு வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 83 தமிழர்கள் மீட்பு

1 mins read
bd6b8711-d6b4-4668-969b-713fee1ef866
அமைச்சர் செஞ்சி மஸ்தான். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள் தமிழக அரசின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகவல் தொழில்நுட்ப பணி என்று கூறி கம்போடியா உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக இளையர்கள் பலர் அங்கு சட்டவிரோத வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

“ஏமாற்றப்பட்ட இளையர்கள் பணி செய்ய மறுத்தால் கொடுமைப்படுத்தப்பட்டதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக இளையர்கள், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

“அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்றார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

சட்டவிரோதமாக கம்போடியா அழைத்துச் செல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த ஜோசப், விருதுநகரைச் சேர்ந்த கேசவன் ஆகிய இருவரும் தமிழக அரசின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை சென்னை வந்தடைந்த இருவரையும் விமான நிலையத்தில் வரவேற்றார் அமைச்சர்.

அப்போது, கம்போடியாவில் இருந்து 27 தமிழக இளையர்களும் மியன்மாரில் இருந்து 22 பேரும் தாய்லாந்தில் இருந்து 34 தமிழர்களும் என இதுவரை வெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்,” என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்