நீலகிரி: உதகை வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்குத் தோடர் பழங்குடி இன மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தனது வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்குச் செல்லும் வழியில் சனிக்கிழமை அன்று உதகைக்கு வருகை புரிந்தார்.
அங்குள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவை அவர் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்து பகுதிக்குச் சென்ற அவர், பழங்குடியினத் தலைவர்களைச் சந்தித்தார்.
மேலும், முத்தநாடு மந்தில் உள்ள பழைமைவாய்ந்த மூன் போ, அடையாள் ஓவ் ஆகிய கோவில்களைப் பார்வையிட்ட ராகுல் காந்தி, அவற்றின் பாரம்பரியம் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார்.
தோடர் இளையர்கள் இளவட்டக் கல்லைத் தூக்கியதைப் பார்த்து ரசித்த பின்னர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார்.
பழங்குடியின மக்களைத் தாம் மிகவும் நேசிப்பதாகக் குறிப்பிட்ட ராகுல், அம்மக்களைச் சந்தித்தது இனிமையான தருணம் என்றார்.
அதன் பின்னர் கார் மூலம் தனது வயநாடு தொகுதிக்குப் புறப்பட்டுச் சென்றார் ராகுல். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது நடைப்பயணத்தின் போதும் நீலகிரிக்கு அவர் வந்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது இரண்டாவது முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்த அவருக்குக் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். அவர்களுக்கு ராகுல் நன்றி தெரிவித்தார்.