சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் இளைய சகோதரர் அசோக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பண மோசடி புகார் தொடர்பாக விசாரிக்கும் நோக்கத்துடன் நான்கு முறை அவருக்கு அழைப்பாணை அனுப்பியதாகவும் அசோக்குமார் இது தொடர்பாக ஒத்துழைக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை கூறியிருந்தது.
இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சி நகரில் தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கரூரில் அசோக்குமார் கட்டி வரும் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. பின்னர் அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
அசோக்குமார் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கொச்சிக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அவரைக் கைது செய்துள்ளனர்.
திங்கட்கிழமை அசோக்குமார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் அப்போது அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணையைத் தொடங்கியது முதல் அசோக்குமாரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதில் அமலாக்கத்துறை முனைப்பு காட்டி வந்தது.
எனினும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும் அசோக்குமார் உடனடியாகத் தலைமறைவானார்.
தொடர்புடைய செய்திகள்
நெஞ்சு வலி இருப்பதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் முன்னிலையாக முடியவில்லை என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத அமலாக்கத்துறை அசோக்குமாரை தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரைக் கைது செய்துள்ளது அமலாக்கத்துறை.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது பல்வேறு முக்கியத் தகவல்களைப் பெற்றுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு அசோக்குமாரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

