சேலம்: நாங்குநேரியை அடுத்து ஏற்காட்டில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியிலும் மாணவர்கள் இடையே மோதல் வெடித்து, அது வன்முறையில் முடிந்துள்ளது.
அப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ஏல நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது.
அப்போது ஒரு கேக்கை ஏலம் விடப்பட்டு தொகை திரட்டப்படும். அந்த வகையில் நடப்பாண்டு கேக் ஏல நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது 12, 10ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே யார் ஏலம் எடுப்பது என்பதில் தகராறு மூண்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து பள்ளி விடுதியில் தங்கியிருந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலரை, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் தாக்கி உள்ளனர்.
இதற்காக ஒரு மாணவர் நெல்லை மாவட்டத்தில் இருந்து தன் சகோதரர்களையும் குண்டர்களையும் வரவழைத்துள்ளார்.
இதையடுத்து, பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோதே 12ஆம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியில் இருந்த பொருள்களை அவர்கள் அடித்து நொறுக்கியதாகவும் பலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கொலைவெறித் தாக்குதல் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

