சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் ஒன்பதாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தன்று சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றுகிறார். இதையடுத்து சுதந்திர தினத்தன்று நடைபெறும் அணிவகுப்புக்கான ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை காமராஜர் சாலையில் நடைபெற்றது.
பேருந்து, ரயில் நிலையங்கள், விமான நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
மாநகரில் ஆங்காங்கே சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் நாற்பதாயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


