சென்னை: சுதந்திர தின விழாவினையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இதன் அடையாளமாக ஆளுநர் மாளிகையில் அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடப் போவதில்லை என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும் இளையர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்றும் ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
“தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளோர், தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர். ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், ‘அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை’ என்பது போல உள்ளது. இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.
“ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது தமிழகத்தில் ஆளும் தரப்புக்கு கடும் அதிருப்தி அளித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக ஆளும் தரப்பு முடிவு செய்துள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

