காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க இரா.முத்தரசன் கோரிக்கை

1 mins read
b8018589-804d-445b-a484-1bb3a80ad3bc
இரா.முத்தரசன். - படம்: ஊடகம்

சென்னை: மணிப்பூர் கலவரத்தில் இருந்து தப்ப காட்டுக்குள் சென்ற தமிழகக் குடும்பங்களை மீட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில், மொத்தம் 230 பேர் காட்டுக்குள் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் மணிப்பூரில் வன்முறை வெடித்தபோது, மோரேவில் இருந்து மியன்மாருக்குத் தப்பிச் சென்ற தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 230 இந்தியர்களில் பலர் நூறு நாள்களுக்கும் மேலாக மியன்மாரின் அடர்ந்த காடுகளில் சிக்கித் தவிப்பதாக கடந்த 13ஆம் தேதி தமிழக ஊடகத்தில் செய்தி வெளியானதை முத்தரசன் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

“அவர்களுக்கு எந்த நிவாரணமும், ஆதரவும் கிடைக்காததால் உயிருக்குப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்திய எல்லைக்குள் குகி-ஸோ பழங் குடியினரால் சூழப்பட்ட நிலையில், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எல்லைகளைத் தாண்டி மியன்மாருக்குள் சென்றிருக்கின்றனர்.

“கலவரத்தில் அவர்களது வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்டுவிட்டன. தற்போதைய நிலவரப்படி, காட்டுக்குள் சென்று தப்பித்த அவர்கள், அங்குள்ள மக்களின் உதவியுடன் பெயர் தெரியாத இடத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

“வாழ்வாதாரங்களை இழக்கும் முன்பு, இந்திய ராணுவத்தின் உதவியுடன் அவர்களைக் கண்டறிந்து, பத்திரமாக மீட்க வேண்டும்.

“இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்,” என்றும் இரா.முத்தரசன் அறிக்கை வழி வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்