கல்விக்கூடமாக மாறிய சிறை: பயனடைந்த 13,000 கைதிகள்

கல்விக்கூடமாக மாறிய சிறை: பயனடைந்த 13,000 கைதிகள்

2 mins read
203c2a15-49fc-40e8-9806-5202df4e24a9
சிறைப் பள்ளிக்கான வகுப்பறையில் பாடங்களைக் கவனிக்கும் கைதிகள். - படம்: ஊடகம்

கோவை: குற்றச் செயல்களுக்காக சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றி வருகிறது கோவை மத்திய சிறைச்சாலை.

இங்கு இதுவரை 13 ஆயிரம் கைதிகள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

அடிப்படைக் கல்வியறிவுகூட இல்லாமல் கைதியாக சிறைக்கு வருபவர்களை கல்வியறிவு பெற்றவர்களாக வெளியே அனுப்பும் பணியை முன்னெடுத்துள்ளதாகச் சொல்கிறார் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தவிர 4 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு பள்ளிக் கல்வி படிப்புகளையும், பட்ட மேற்படிப்பு, ஆறு மாதச் சான்றிதழ் படிப்புகளையும், ஓராண்டு டிப்ளோமா (பட்டயப்) படிப்புகளையும் கைதிகள் மேற்கொள்ள முடியும்.

இதற்கு தமிழக அரசும், கல்வி அமைப்புகளும் உதவுகின்றன.

“ஆண்டுதோறும் பள்ளி அளவிலான பொதுத்தேர்வுகளை இச்சிறையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் எழுதுகின்றனர். சிறையில் உள்ள பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

“சிறை வளாகத்தில் உள்ள கல்விக் கூடத்தில் சராசரியாக 400 பேர் படித்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 பேர் வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர். தொழிற்கூடங்களில் வேலைக்குச் செல்லும் தண்டனைக் கைதிகளில் படிக்க ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பிட்ட நேரம் பணி செய்த பின்னர், வகுப்புகளுக்கு வருவர்,” என்கிறார் தலைமை ஆசிரியர் சக்திவேல்.

சிறை அறையில் உள்ள மின் விளக்கைப் பயன்படுத்தி இரவு நேரத்தில் கூட சில கைதிகள் பாடங்களைப் படிப்பதாகவும் சிறை வளாகத்தில் உள்ள நூலகமும் கைதிகளுக்குக் கைகொடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.

கடந்த 2000வது ஆண்டில் இருந்து தற்போது வரை ஏறத்தாழ 13 ஆயிரம் கைதிகள் மத்திய சிறையின் கல்விக் கூடத்தில் கல்வியறிவு பெற்று பயனடைந்துள்ளதாக கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

கோவை சிறையில் தற்போது இரண்டாயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்