சென்னை: தமிழகத்தில் வெளி மாநில ரயில்கள் அதிகம் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், கொருக்குப்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை, தாம்பரம், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு ஆகிய 10 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வெளி மாநில ரயில்கள் அதிகம் வந்து செல்வதால் இந்த ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்த கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“மாதந்தோறும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இப்போது உள்ளதைவிட கூடுதல் இடங்களில் கண் காணிப்புக் கருவிகளைப் பொருத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் தேவையற்ற நுழைவாயில்கள் மூடப்படும். சுற்றுச்சுவர் அமைத்து கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும்,” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

