சென்னை: ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக சென்னையில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது.
சார்ஜா, துபாயில் இருந்து வந்த பயணிகள் விமானங்களும் துருக்கியிலிருந்து வந்த சரக்கு விமானமும் தரையிறங்க முடியாத காரணத்தால் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
இதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்குப் புறப்பட வேண்டிய பத்து விமானங்களின் புறப்பாடு தாமதமானது. இதனால் விமானப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சாலைகளில் தேங்கி நின்றதால் வாகனமோட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே வாகனங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் அவை பழுதடைந்து நின்றன.
இரவு முழுவதும் சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழை வெளுத்துக்கட்டியது. இதனால் கடந்த சில நாள்களாக சென்னையில் நிலவிய வெப்பம் தணிந்தது.
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டாலும் பொதுமக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.