தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு

1 mins read
0b9ed7c9-112f-49d4-9b85-3e9abbcbd6e0
புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் பகுதியில் உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் மொட்டையடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏகனாபுரத்தில் கிராம சபைக் கூட்டத்தையும் அவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர். - கோப்புப்படம்: ஊடகம்

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் 384வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

மொத்தம் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுதந்திர தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களைப் புறக்கணித்தனர்.

மேலும் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி வைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

புதிய விமான நிலையத்துக்காக பரந்தூர், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது.

விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 384ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் நீடித்தது. இதுவரை ஆறு முறை கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்களும் தீர்மானம் நிறைவேற்றி வந்தனர்.

இந்நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கிராம சபைக் கூட்டத்தை அப்பகுதி மக்கள் புறக்கணித்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், பள்ளிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாவும் புறக்கணிக்கப்பட்டது. மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கோட்ட இயக்கம் சார்பில் மேலும் பல போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

பரந்தூரில் கடந்த இரு நாள்களாக கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்விமான நிலையம்