சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல எனத் தெரியவந்துள்ளது.
பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு அவரது சகோதரருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது.
எனினும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு விசாரணையை தவிர்த்தார்.
இந்நிலையில் அவர் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
எனினும், அசோக்குமாரை தாங்கள் இன்னும் கைது செய்யவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. பண மோசடி தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என அசோக் குமாரின் மனைவி, தாயார், சகோதரிக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அசோக் குமார் கைதானதாக தவறான தகவல் பரவி வருகிறது என்று அமலாக்கத்துறை தெரிவிக்கிறது.
இதற்கிடையே, பண மோசடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை உள்ளிட்ட மூவாயிரம் பக்கங்கள் அடங்கிய வழக்கு ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

