நடிகர் யோகி பாபு கடந்த வாரம் ஊட்டியில் நடந்த படப்பிடிப்பின் போது, அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து உற்சாகமாகக் காற்பந்து விளையாடினார். அரைக்கால் சட்டைக்கு மேல் வேஷ்டி அணிந்துகொண்டு விளையாடினார். அவர் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்க சிறுவர்கள் அவரிடம் பந்தை உதைக்க, அவரும் பந்தை உற்சாகமாக உதைத்துத் தள்ளினார்.
அந்தக் கண்கொள்ளாக் காட்சியை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். யோகி பாபு சிறுவர்களுடன் சேர்ந்து காற்பந்து விளையாடும் காட்சியைக் கொண்ட காணொளியை யூடியூப்பில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக ஊட்டி சுற்று வட்டாரப் பகுதியில் நடிகர் யோகி பாபு, சார்லி, நடிகைகள் வாணி போஜன், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் சட்னி, சாம்பார் என்ற இணையத் தொடருக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. திங்கட்கிழமை காலை தேவர்சோலை பகுதியில் நடிகர் யோகிபாபு நடித்து வரும் வெப்சீரிஸ் படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் யோகிபாபு மற்றும் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
தங்கள் பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடந்ததை அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள், சிறுவர்கள் அதிகளவில் குவிந்து படப்பிடிப்பைப் பார்வையிட்டனர்.

