கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவர்னர் என்கிற 69 வயது ராமுவை அவரது மகன், புருஷோத்தமன் 45, அடித்துக் கொன்றது அவரது கைப்பேசி பதிவிலிருந்து தெரியவந்துள்ளது. சைக்கிள் பழுது நீக்கும் கடையை நடத்தி வந்த திரு ராமு, ஜூலை 25 ஆம் தேதி வீட்டின் அருகில் மர்மமான முறையில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.
குடும்பத்தினர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர், மோப்ப நாயை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இறந்தவரது குடும்பத்தினர் அனைவரது கைப்பேசி எண்களையும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது மகன் புருஷோத்தமன், “எனது தந்தையை நான் தான் அடித்துக் கொன்றேன்,” என தனது மனைவியிடம் பேசிய 20 நிமிட ஒலிப்பதிவை காவல்துறையினர் கேட்க நேர்ந்தது.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இடப் பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் தனது தந்தையை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக புருஷோத்தமன் கூறினார்.
தந்தையை வேறு யாரோ அடித்துக் கொன்றுவிட்டதாக காவல் நிலையத்தில் மகன் புகார் கொடுத்து நாடகமாடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக புருஷோத்தமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

