சென்னை: நீட் தேர்வை நீக்காத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும் இம்மாதம் 20ஆம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுகவில் உள்ள பல்வேறு அணிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதில், தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உரு வெடுத்திருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக ஆளுநர் ரவி அண்மையில் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை நீக்காத மத்திய அரசையும் பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும், வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்,” என கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நீட் தேர்வு மரணங்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசும் அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்யும் அதிமுகவினரும் நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவியுமே காரணம் என திமுக அணிகள் சாடி உள்ளன.
“ஒட்டுமொத்த தமிழக மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனால், அந்த நடவடிக்கை களுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
“மறைந்த முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின்போது, அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வராத நீட், எடப்பாடி பழனிச்சாமியின் அடிமை ஆட்சியின் போது தமிழகத்துக்குள் எப்படி வந்தது,” என்று அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
“நீட் தேர்வை அகற்றக் கோரியும் அதற்கு ஆதரவளிக்கும் ஆளுநரையும் பாஜகவையும் கண்டிக்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் மாபெரும் அறப்போராட்டம் நடைபெறவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“தமிழகத்தில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்க அழைக்கின்றோம்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

